கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
இது தொடர்பாக கனிமொழிமதி என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ், சதிஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. கீழடியில் அகழாய்வு நடைபெற்று வரும் இடம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அகழாய்வு நடைபெறும் இடத்தை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது என கூறிய நீதிபதிகள் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பது தான் சிறப்பு என தெரிவித்தனர். ஹரப்பா, மொகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க அரசு வழங்கியுள்ள இடத்தை அரசு வழக்கறிஞர்கள் பார்வையிட்டு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

