கரூர்: மனு அளித்த 24 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு வீடு வழங்கிய ஆட்சியர்
மனு அளித்த 24 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அரசு வீடு வழங்கி கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தனது மாற்றுத்திறனாளி மகள் உள்பட 3 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி மகளுக்கு அரசு உதவித்தொகை மற்றும் கூலி வேலை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் செல்வி தனது மகள் நிஷாவை கல்லூரியிலும், நிவேதாவை 12ஆம் வகுப்பிலும் மாற்றுத் திறனாளியான மற்றொரு மகள் ரோகிணியை ஒன்பதாம் வகுப்பிலும் படிக்க வைத்து வருகிறார்.
குறைந்த ஊதியத்தில் 3 மகள்களுடன் வாடகை வீட்டில் குடியிருக்கும் தனக்கு அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்குமாறு நேற்று நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளித்தார்.
இதையடுத்து இந்த மனு குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், இன்று மூன்று பெண் பிள்ளைகளின் நலன் கருதி உடனடியாக செல்விக்கு கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை ஒதுக்கினார். மனு அளித்த 24 மணி நேரத்திலேயே அரசு வீடு ஒதுக்கப்பட்டதால், இந்த குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது.