கரூர்: எலும்பு சிதைவு மரபணு நோயால் படுக்கையில் முடங்கிய சிறுவன்- உதவிக்கரம் நீட்டுமா அரசு?

கரூர்: எலும்பு சிதைவு மரபணு நோயால் படுக்கையில் முடங்கிய சிறுவன்- உதவிக்கரம் நீட்டுமா அரசு?
கரூர்: எலும்பு சிதைவு மரபணு நோயால் படுக்கையில் முடங்கிய சிறுவன்- உதவிக்கரம் நீட்டுமா அரசு?

கரூரில் எலும்பு சிதைவு மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்கு 50-க்கும் அதிகமான முறை எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளான். தனது மகனை காப்பாற்ற உதவ வேண்டுமென்று ஏழை பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் சஞ்சய். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் இப்போது படுக்கையிலேயே முடக்கப்பட்டுள்ளார். காரணம் இந்த சிறுவனுக்கு பிறவியிலிருந்தே அஸ்டோஜெனிசிஸ் இம்பெர்பெக்டா என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது எலும்பு சிதைவு நோய் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். சாக்பீஸ் அளவு உறுதி இருக்கும் இந்த சிறுவனின் எலும்புகள் மிக எளிதாக உடைந்துவிடுமாம்.

11 வயதில் 50-க்கும் மேற்பட்ட தடவைகள் சஞ்சய் உடலில் எலும்புகள் உடைந்துள்ளது. இந்த மரபணு சார்ந்த குறையை நீக்குவதற்காக சிறுவயதிலிருந்தே மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிறப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். ஒருமுறை ஊசி செலுத்துவதன் மூலம் அடுத்து மூன்று மாத காலத்திற்கு சிறுவனின் எலும்புகள் உடையாமல் இருக்குமாம். எனவே ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை சஞ்சய்க்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு ஊசி செலுத்து சென்றுவருகிறார்.

சஞ்சய்யின் தந்தை சிவகுமார் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் சதுரங்க விளையாட்டு பயிற்சியாளராக பணிபுரிகிறார். மிகக் குறைந்த வருமானம் உள்ள இவருக்கு, கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடைத்த வருமானமும் நின்று போனது. இதனால் சஞ்சய்க்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை செலுத்தவேண்டிய ஊசியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சஞ்சய் தற்போது நடக்க முடியாத அளவுக்கு முடங்கியுள்ளான். அவனால் எழுந்து நடக்க முடியாத நிலை. கழிவறைக்குச் செல்ல வேண்டுமென்றால் கூட தாய் தந்தை தான் தூக்கிச் செல்கின்றனர்.

வருமானம் இல்லாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து தனது மகனுக்கு ஊசி போட முடியவில்லை என்றும், ஏற்கெனவே பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்துள்ளேன். இதற்கு மேல் என்னால் செலவு செய்ய சக்தியில்லை என்று வருத்தத்துடன் கூறும் சிவக்குமார், அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

11 வயதில் தனது உடலில் எலும்புகள் 50-க்கும் அதிகமான முறை உடைந்து வேதனை தந்தாலும் இந்த சிறுவன் வரைந்துள்ள ஓவியத்தில் உள்ள வாசகம், “எப்போதும் யாருடையை இதயத்தையும் உடைக்காதீர்கள்.......”.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com