கரூர் | இளையராஜா இசை நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள் - நடந்தது என்ன?
செய்தியாளர்: வி.பி.கண்ணன்
கரூரில் ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி திறந்த வெளி திடலில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறும் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை காண்பதற்கு ரூ.500 முதல் 50 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்தனர்.
கரூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இன்னிசை நிகழ்ச்சியை காண்பதற்காக வருகை தந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சிக்கு சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யாததால் ஏராளமான ரசிகர்கள் அவதி அடைந்தனர். குறிப்பாக குறைந்த அளவு மட்டும் இருக்கைகளை வைத்துக் கொண்டு, அதிக அளவு டிக்கெட்களை விற்பனை செய்ததாகவும், 3000 முதல் 5000 ரூபாய் டிக்கெட்டை வாங்கிச் சென்றும் எங்களை இசை நிகழ்ச்சியை காண உள்ளே விடவில்லை என ரசிகர்கள் சிலர் ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை பார்க்காமல் சென்று விட்டனர்.
இதேபோல் ஏராளமான பொதுமக்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும், உட்கார இடம் இல்லை எனவும் காவல்துறையினர் கேவலமாக நடத்தியதாகவும் குற்றம் சாட்டினர். மூன்று மணி நேரமாக நின்று கொண்டே நிகழ்ச்சியை பார்த்த ரசிகர் ஒருவர் விரக்தியில் பாதியிலேயே வெளியே வந்ததோடு 3000 ரூபாய் பிளாட்டினம் டிக்கெட்டை கோபத்தில் கிழித்து வீசினார்.
இருக்கை நிரம்பிவிட்டதால் உள்ளே விடவில்லை என பொதுமக்களிடம் போலீசார் மற்றும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய நிலையில், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் கூட உள்ளே ஏன் விடவில்லை என கூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.