கரூர் | அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் ED Raid - 5 மணி நேரமாக தொடரும் சோதனை
செய்தியாளர்: வி.பி.கண்ணன்
கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களான கொங்கு மெஸ் மணி, ஒப்பந்ததாரர் சங்கர் என்பவரின் இல்லம் மற்றும் சக்தி மெஸ் என்ற உணவகத்தை நடத்தி வரும் கார்த்தி என்பவரது இல்லம் ஆகிய மூன்று பேரின் வீடுகளிலும் இன்று காலை 8 மணிக்கு கேரளாவிலிருந்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மூன்று கார்களில் 15க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட மத்திய துணை ராணுவ படையினருடன் வந்து காலை 8 மணிக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 5 மணி நேரத்தை கடந்தும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் மற்றும் வருமானவரித் துறையினர் மாறி மாறி சோதனை நடத்தினர்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மீண்டும் கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பர்களின் இல்லங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 14 ம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதான விசாரணை வர உள்ள நிலையில், இந்த சோதனை நடைபெறுவது முக்கியமாக கருதப்படுகிறது.