கரூர் இரட்டை கொலை சம்பவம் : காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை அடையாளம் காட்டியதால், தந்தையும் மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் பாஸ்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் இனாம்பூளியூரைச் சேர்ந்த ராமன் அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் முதலைப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்த கும்பல், தந்தையையும் மகனையும் வெட்டிக்கொன்றதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள், பிரபாகரன், கவியரசன் உள்ளிட்ட 6 பேர் சரணடைந்தனர். அவர்களை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும்வரை பாஸ்கர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பணியிடை நீக்க காலத்தில் அவர் கரூரில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.