ஓட்டுநரின் பணி ஓய்வு நாளில் கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
பணி ஓய்வு பெற்ற தனது ஓட்டுநரை காரில் அமரவைத்து, தானே காரையும் ஓட்டிச் சென்று வீட்டில் இறக்கிவிட்ட கரூர் ஆட்சியரின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநர் பரமசிவம். 35 ஆண்டு கால அரசு ஓட்டுநராக பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பழகன் தலைமையில் பரமசிவத்திற்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. விழா முடிவில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக ஓட்டுநர் பரமசிவத்தையும் அவரது மனைவியையும் தனது காரில் பின் சீட்டில் அமர வைத்து, ஆட்சியர் தானே காரை ஓட்டிச் சென்றார். காந்திகிராமம் பகுதியில் உள்ள வீடு வரை பரமசிவத்தை கொண்டு சென்று விட்டார் ஆட்சியர். பின்னர் பரமசிவத்தின் மனைவி நெகிழ்ச்சியுடன் தயாரித்து அளித்த காஃபியை அருந்திவிட்டு ஆட்சியர் திரும்பினார்.
ஓய்வு பெறும் நாளில் ஆட்சியர் அளித்த இன்ப அதிர்ச்சியில் இன்னும் மீளாமல் இருக்கிறார் கார் ஓட்டுநர் பரமசிவம்.