”இந்த செய்தி முற்றிலும் திரிக்கப்பட்டது”-விநாயகர் சிலை கூடம் சீல் விவகாரம்..கரூர் ஆட்சியர் விளக்கம்!

கரூரில் விநாயகர் சிலை தயாரிப்புக் கூடங்கள் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
விநாயகர் சிலைகள், கரூர் ஆட்சியர்
விநாயகர் சிலைகள், கரூர் ஆட்சியர்புதிய தலைமுறை

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக, வீடு மற்றும் பொது இடங்கள், கோயில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், விநாயகர் சிலைகள் வைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசும், காவல் துறையும் வெளியிட்டுள்ளன. அதன்படி வைப்பதற்கே, காவல் துறை அனுமதி வழங்கி வருகிறது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கரூர் விநாயகர் தயாரிப்புக் கூடத்துக்கு சீல்
கரூர் விநாயகர் தயாரிப்புக் கூடத்துக்கு சீல்

கரூர் விநாயகர் சிலை தயாரிப்புக் கூடத்துக்கு  சீல்!

இந்த சிலை தயாரிப்புக் கூடத்தில் சுமார் 400 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்துக்கு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திடீரென சென்று சோதனை மேற்கொண்டனர். சிலை தயாரிப்பு விதிகளை மீறி பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற கெமிக்கல் கலவையைப் பயன்படுத்தி சிலை தயாரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சிலை தயாரிப்பு கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கும் தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அத்துடன், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, உள்ளூர் மண்பாண்ட தயாரிப்பாளர்கள் புகார் அளித்திருந்தனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

இந்தச் செய்தி ஊடகங்களிலும் பரவியது. இதையடுத்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தன்னுடை எக்ஸ் பக்கத்தில் கண்டனப் பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘பண்டிகைக் காலங்களை நம்பி பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை திமுக சீர்குலைக்கிறது. சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தையும் திமுக தடுத்து நிறுத்துகிறது. விநாயகர் சதுர்த்தி இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊழல் திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டனப் பதிவுகளையும் சிலர் பதிவிட்டனர். இதனால் இந்த விவகாரம் பேசுபொருளானது.

சீல் விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விளக்கமளித்துள்ளார். அவர், மத்திய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் செய்யப்படுவதாக, மண்பாண்ட தொழிலாளர்கள் மூலமாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மாசு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் செய்யக்கூடாது என முன்னதாகவே தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அதனை மீறும் வகையில் அப்பகுதியில் சிலைகள் செய்யப்பட்டதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வடமாநில தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் வருகிற 25ஆம் தேதி அனைத்து சிலைகளும் திரும்ப ஒப்படைக்கப்படும். அரசு அறிவுறுத்தியபடி களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களில் தயார் செய்யப்பட்ட சிலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் எக்ஸ் பக்கத்திலும் இதுகுறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘இந்தச் செய்தி உண்மையில் முழுமையற்றது மற்றும் திரிக்கப்பட்டது’ எனக் கூறி இருக்கும் அவர், அதற்கான உண்மை நிலவரத்தையும் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com