''கை நிறைய வருமானம் வருகிறது'' - பூக்கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி!
கரூரை சேர்ந்த இளைஞர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் அதற்கு தொடர்பே இல்லாத பூக்கடை நடத்தி வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்.
கரூர் குளித்தலையில் இருக்கும் 'இன்ஜினியர் பூ கடை' என்ற பெயரைக் கேட்டாலே ஒரு நிமிடம் அனைவரும் நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர். பெயருக்கு ஏற்றாற்போலவே பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் தான் இன்ஜினியர் பூக்கடையை நடத்தி வருகிறார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பொறியியல் படித்துவிட்டு, குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வந்த நிலையில், தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் இருந்தாலும், தனக்கு தெரிந்த பூக்கட்டும் பணியை வைத்துக்கொண்டு இந்த பூக்கடையை தொடக்கியுள்ளார்.
தனது நண்பர்களின் ஆதரவுடன் நடத்தி வரும் இந்த பூக்கடையின் மூலமாக, கை நிறைய சம்பாதித்து வருவதாகவும், தற்போது பலருக்கும் வேலைவாய்ப்பை கொடுக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளதாகவும் கூறுகிறார். மேலும், ஆரம்பத்தில் குறைவான லாபம் கிடைத்து வந்தாலும், தற்போது அதிக லாபத்தில் பூக்கடை இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.