ராணுவ வீரர் மூர்த்தி உடல் 42 குண்டுகள் முழங்க அடக்கம்
காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த கரூரைச் சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
33 வயதான மூர்த்தி கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த 9ஆம் தேதி பனிச்சரிவில் சிக்கி மூர்த்தி உயிரிழந்தார். 5 நாட்கள் தேடிய பிறகு மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது. டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்ட மூர்த்தியின் உடல் கரூரிலிருந்து திறந்த ராணுவ வாகனத்தில் வைத்து நாதிப்பட்டிக்கு எடுத்துவரப்பட்டது.
10 கிலோ மீட்டர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட மூர்த்தியின் உடலுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆட்சியர் கோவிந்தராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 42 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் மூர்த்தியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் மூர்த்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.