சபாநாயகரை நீக்ககோரிய கருணாஸ் மனு எங்கே போய் முடியும்?
சபாநாயகர் தனபால் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி கருணாஸ் எம்எல்ஏ சார்பாக வழக்கறிஞர்கள் சட்டபேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.
கருணாஸ் எம்.எல்.ஏ சார்பில் அவரது வழக்கறிஞர்கள் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் இந்த மனுவை கொடுத்துள்ளனர். அதில் சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதால் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விதிகளை மீறி சபாநாயகர் தனபால் செயல்படுவதால், சட்டமன்றத்தை கூட்டி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும் என கருணாஸின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் மீது உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியுமா..? அதில் உள்ள நடைமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சபாநாயகர் செயல்பாட்டின் மீது எம்எல்ஏக்களுக்கு அதிருப்தி ஏற்படும் பட்சத்தில் சபாநாயகரை நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு சட்டப்பேரவை செயலருக்கு எம்எல்ஏக்கள் கடிதம் எழுதலாம். ஒரு எம்எல்ஏவும் கடிதம் எழுதலாம். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எம்ல்ஏ-க்களும் கடிதம் எழுதலாம்.
இந்தக் கடிதத்தின்மீது 21 நாட்களுக்குள் சட்டப்பேரவை செயலாளர் ஆலோசித்து முடிவெடுப்பார். பொதுவாக குறைந்தப்பட்ச எம்எல்ஏ-க்களின் (35) எண்ணிக்கை சபாநாயகருக்கு எதிராக இருக்கும் பட்சத்தில்தான் சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் அனுமதி கொடுப்பார். இல்லையென்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி கிடைக்காது.
சட்டப்பேரவை செயலாளர் அனுமதி கொடுத்த அடுத்த 14 நாட்களுக்குள் சட்டப்பேரவை கூட்டப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும். இதற்கு சட்டப்பேரவையின் 3-ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். இல்லையென்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கப்பட்டு அவரே சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் நீடிப்பார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து 3-ல் இரண்டு பங்கிற்கான எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை என்ன என்பது கணக்கிடப்படும். இது ஒவ்வொரு மாநில சட்டப்பேரவைக்கும் வேறுபடும். தமிழகத்தை பொறுத்தவரை 3-ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு சட்டப்பேரவை தலைவருக்கு இருப்பதால் அவர் பதவிக்கு ஆபத்து வராது என்றே சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, “கருணாஸ் கொடுத்த மனுவிற்காக உடனடியாக சட்டப்பேரவையை கூட்டமாட்டார்கள். சட்டப்பேரவையை கூட்டும் நேரத்தில்தான், கருணாஸின் மனு பரிசீலிக்கப்படும். அதன்பின்னர் அவருக்கு 30க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும். அந்த நேரத்தில் சபாநாயகர் சபைக்கு வெளியேயிருப்பார். அவரது இடத்தில் துணை சபாநாயகர் அல்லது தலைமைக்குழு உறுப்பினர் யாரேனும் ஒருவர் இருப்பார். தீர்மானத்தில் சபாநாயகர் தோற்கடிக்கப்பட்டால், அரசியல் பூகம்பம் வெடிக்கும். அது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும்.
பெரும்பான்மை இல்லை என முதலமைச்சர் பதவி விலகக்கூட நேரிடும். அவ்வாறு அவர் பதவி விலகவில்லை என்றால், எதிர்க்கட்சியினர் ஆளுநரை சந்தித்து அரசுக்கு பெரும்பான்மை இல்லை என மனு கொடுப்பார்கள். அதை பரிசீலித்து, ஆளுநர் முதலமைச்சரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவார். அதன்படி ஆட்சியின் மீது நம்பிக்கைத் தீர்மானத்தைக்கொண்டு வந்து முதலமைச்சர் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் ஆட்சி தொடரும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இதெல்லாம் நடந்தால் தான், இது சாத்தியம். மற்றபடி கருணாஸின் இந்த மனுவை, அவரது அரசியல் நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும்” என்றார்.