கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் உடல் தகனம் - இறுதி சடங்கில் பங்கேற்ற முதல்வர்

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் உடல் தகனம் - இறுதி சடங்கில் பங்கேற்ற முதல்வர்

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் உடல் தகனம் - இறுதி சடங்கில் பங்கேற்ற முதல்வர்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நிழலாக கருதப்பட்ட சண்முகநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 3 முறை அவரது இல்லத்திற்கு சென்றுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த சண்முகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர். 80 வயதான அவர், உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனையிலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுசெல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது முதலமைச்சரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

பின்னர், மீண்டும் சண்முகநாதனின் இல்லத்திற்கு சென்றார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் சண்முகநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அவரது உடலுக்கு இரண்டாவது நாளாக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, ரகுபதி, தங்கம் தென்னரசு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் செல்வி, பாடலாசிரியர் வைரமுத்து, பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இறுதி ஊர்வலம் நடைபெறும் வரை அவரது இல்லத்திலேயே இருந்தார். பிற்பகலில் சண்முகநாதனின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே மயானத்திற்கு சென்று, சண்முகநாதனின் இறுதிச் சடங்கில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சண்முகநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com