மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Published on

கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள் ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்துக்கு அருகே அடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கரில் இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி திமுக சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை அவசர வழக்காக நேற்று இரவு உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கை இன்று காலை விசாரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எதிராக தொடரப்பட்ட 5 வழக்குகளை மனுதாரர்கள் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். அதற்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர். ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக தரப்பில், ’அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது. சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். அதனால் அவரது நினைவிடம் அருகிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும்’ என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், ’காந்தி மண்டபம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா? காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வது வேண்டாம் என்று சொல்வது தலைவர்களை அவமரியாதை செய்வதாகும். அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரமில்லை. திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய தலைவர் பெரியாருக்கு மெரினாவில் நினைவிடம் இருக்கிறதா? ஜானகியம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே இடம் தர கருணாநிதி மறுத்தார். மெரினாவில் இடமளிக்க மறுப்பது சட்டப்பிரிவு 14ஐ எப்படி மீறுவதாகும்? அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை ’ என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com