ஜல்லிக்கட்டை தடை செய்வது தமிழகத்தின், தமிழினத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என திரைப்பட இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கரு. பழனியப்பன், வருடம் முழுவதும் காளையை பராமரித்தவர்கள் எப்படி கொடுமைபடுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பினார். காளைகள் எப்பொழுதும் அன்பால் வளர்க்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு போன்ற நம் தனித்த அடையாளங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு வேண்டாம் என்று கூறி வருகிறது. தேசத்தின் மொழி இந்தி என்றும், தேசத்தின் பொது உணவு பரோட்டா என்றும், சல்வாரை தேசிய உடையாக்கவும் முயற்சி செய்தனர். இவையெல்லாம் நடக்கவில்லை. எனவே நமது தனித்த அடையாளமாக எதுவெல்லாம் இருக்கிறதோ அதை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்று கரு.பழனியப்பன் கூறினார்.