அறிக்கை எழுதியது நடிகர் விஜயாஅல்லது எழுதி கொடுத்ததில் கையெழுத்து போட்டு இருக்கிறாரா? - கரு.நாகராஜன்
75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.. தமிழர் பெருமையான சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது என்று தவெக தலைவர் விஜய், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி குறித்தும் திமுக அரசு குறித்தும் விமர்சித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் வெளியிட்ட அரசியல் அறிக்கையை வன்மையாக கண்டித்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், அறிக்கை அவர் எழுதியதா, தெரிந்து எழுதியதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், "அறிக்கை எழுதியது நடிகர் விஜயா? அல்லது எழுதி கொடுத்ததில் கையெழுத்து போட்டு இருக்கிறாரா? அந்த அறிக்கையில் உள்ளே என்ன இருக்கிறது என்பது அவருக்கு தெரியுமா? உலக வாழ்க்கை முறைக்கும், நீதி மிகுந்த அரசாட்சிக்கும், வெற்றி வாகை சூடும் மன்னர்களுக்கும், உலகம் உள்ளவரை தழைத்து நிற்கும் ஆன்மீகப் பணிகளுக்கும் உதாரணமாக திகழ்ந்தவர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் மற்றும் அவர் வழி வந்தவர்கள். அவர்களுடைய பிறந்த தின விழா, கங்கைகொண்ட சோழபுரம் அமைக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா, நாணய வெளியீட்டு விழா, உலகத் தமிழர்களை பெருமை பெறச் செய்ய இந்த விழாக்களில் பங்கேற்று அவர்களுடைய திருவுருவச் சிலைகளை பிரம்மாண்டமாக அமைக்கப்படும் என்று சொல்லி சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான செயலை, அற்பத்தனமாக குறை சொல்லி அறிக்கை வெளியிட விஜய்க்கு என்ன தேவை ஏற்பட்டது என்று புரியவில்லை. இதற்கு முன் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம் இருந்ததா? என்று விஜய் கேள்வி கேட்டிருக்கலாம்.
திமுகவை கேள்வி கேட்டிருக்கிறீர்கள் ஆனால் பாஜக செய்யட்டும் என்று திமுக காத்திருந்ததைப் போல ஒரு உள்நோக்கம் வைத்து அப்பட்டமான வெறுப்புணர்ச்சி மிக்க அறிக்கையை விஜய் வெளியிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குண்டா சட்டியில் குதிரை ஓட்ட நினைக்கும் விஜயின் அறிக்கையை மனசாட்சி உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். யாருக்காக யாரின் கைக் கூலியாக விஜய் செயல்படுகிறார் என்று தான் மக்களுக்கு குழப்பமாக இருக்கிறது. தெளிவான மக்களுக்கான அரசியல் செய்ய தெரியவில்லை என்றால் இன்னும் பல படங்களில் நடிக்கலாம் மார்க்கெட் இருக்கிறது. அதற்காக உலகமே போற்றும் கங்கைகொண்ட சோழபுரம் விழாக்களை கொச்சைப்படுத்த நினைப்பது ஜோசப் விஜய்க்கு அழகல்ல. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அதன் பொதுச்செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்
"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" நிகழ்ச்சிகளில் பெருந்திரளாக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு விறுவிறுப்போடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தமிழக மக்கள் முடிவு செய்து இருக்கின்ற நிலையில் பாஜகவிற்கும் திமுகவிற்கும் முடிச்சு போட்டு ஓர் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்த நினைக்கும் விஜயின் நயவஞ்சக சூழ்ச்சி என்ன என்பதுதான் புரியவில்லை! மீண்டும் மீண்டும் இதை நீங்கள் சொல்லி வந்தால் உங்களை தமிழக மக்கள் வேறு விதமாகத்தான் புரிந்து கொள்வார்கள்.
தமிழின் பெருமை தமிழர்களின் பெருமை என உலகெங்கும் தமிழ் மொழியின் தூதுவராக செயல்பட்டு வரும் பாரத பிரதமரின் நற்செயலை இதற்கு முன் இந்த தேசத்தை ஆண்ட எந்த பிரதமராவது செய்திருக்கிறார்களா? என்று விஜய் வரலாற்று பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டும்.
கீழடி ஆய்வுக்கு தொடக்கத்தில் இருந்து ஒத்துழைப்பு தருவது மத்திய அரசு. அதை மறந்து விட்டு நயவஞ்சகத்தோடு அறிக்கை கொடுக்கிறார். வரலாற்றை பதிவேடுகளில் ஏற்றும் பொழுது தேவையான விளக்கங்களை கேட்டு பெறுவது ஒரு அரசினுடைய கடமை. அப்படி ஒரு விளக்கத்தை கேட்டதற்காக.. ஏதோ ஆய்வையே மத்திய அரசு புறக்கணிப்பது போல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் விஜய் போன்றவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்பதைப் போல தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்கு விஜய் இப்படி எல்லாம் அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை தமிழகம் ஏற்காது. புரட்சி என்ற பெயரில் பொய்யும் புரட்டையும் பேசித் திரியாதீர்கள்.. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.