போராட்டத்தை மார்ச் 31ம் தேதிவரை தள்ளிவைக்க வேண்டும்: ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

போராட்டத்தை மார்ச் 31ம் தேதிவரை தள்ளிவைக்க வேண்டும்: ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை
போராட்டத்தை மார்ச் 31ம் தேதிவரை தள்ளிவைக்க வேண்டும்: ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை அமல்படுத்த உரிய கால அவகாசத்தை அளிக்கும் பொருட்டு மாணவர்கள் போராட்டத்தினை மார்ச் 31ம் தேதி வரை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான கார்த்திகேய சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தநிலையில், காட்சிப்படுத்தப்படக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நிரந்தர சட்டம் ஏற்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தினை தொடக்கம் முதலே முன்னெடுத்து வரும் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வழக்கறிஞர் அம்பலத்தரசு மற்றும் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி, வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

ராஜசேகரன் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் 90 சதவீதம் வெற்றியடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டம் திருப்திகரமான முறையில் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார். இந்தநிலையில் போராட்டம் குறித்து மாணவர்கள், இளைஞர்கள் நல்ல முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து பேசிய கார்த்திகேய சிவசேனாதிபதி, ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தினை அமல்படுத்த கால அவகாசம் அளிக்கும் வகையில் மாணவர்கள், தங்களது அறப்போராட்டத்தினை மார்ச் 31ம் தேதிவரை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்திருக்கும்நிலையில், அவ்வாறு சட்டம் இயற்றப்படவில்லை என்றால் நமது கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்று கூறினார். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும்போது, இந்த போராட்டம் மாணவர்களுடையது. அதில் எனது பங்கு மிகக்குறைவுதான். ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதே எனது குறிக்கோள். வீரவிளையாட்டு மீட்புக்கழக தலைவர் ராஜேஷ் பேசும்போது, குடியரசுத்தலைவரின் ஒப்புதல் இருப்பதால் சட்டத்தினை யாரும் எதிர்க்க முடியாது. இதுகுறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கம் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com