ஐஎன்எக்ஸ் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்ற அனுமதியோடு லண்டன் சென்று சென்னை திரும்பிய அவரை சிபிஐ கடந்த 28ஆம் தேதி கைது செய்தது. சென்னை விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சிபிஐ காவலில் உள்ளவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தனக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அனுப்பிய சம்மன்களை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார் தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் நடத்திவரும் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படாத விசயங்களில் எல்லாம் தன்னை தொடர்புபடுத்த முயற்சி நடைபெறுவதாக தனது மனுவில் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.