கோவை சிறுமி வன்கொடுமை.. சக கைதிகள் தாக்குதல்? குற்றவாளி கார்த்தி காயம்!
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 2 பேரைப் பிடித்தனர்.
இரண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும், போலீசார் விசாரணையின்போது தப்ப முயன்ற கார்த்தி மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்தசூழலில் தான், இதையறிந்த சக கைதிகள் இன்று கார்த்தி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலத்த காயமடைந்துள்ள கார்த்தி மீண்டும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

