‘பாபர் மசூதியை இடிப்பது போல விளையாட்டு’ - கர்நாடக பள்ளியில் அரங்கேற்றம்
கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ‘பாபர் மசூதி’யை இடிப்பதுபோல மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில், ஸ்ரீ ராம வித்யகேந்திர பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை பேண்ட் அணிந்து திரண்டு நிற்கின்றனர். அவர்களுடன் வெள்ளை சட்டை மற்றும் காவி வேட்டி அணிந்த மாணவர்களும் சேர்ந்து நிற்கின்றனர். ஆங்காங்கே சிலர் காவிக்கொடியை ஏந்தி நிற்கின்றனர். அப்போது அங்கே பாபர் மசூதியின் பெரிய போஸ்டர் ஒன்று வைக்கப்படுகிறது.
பின்னர் ஸ்பீக்கரில் அந்த கட்டடத்தை உடையுங்கள் என குரல் எழுப்பப்படுகிறது. அதைக்கேட்டதும் மாணவர்கள் போஸ்டர்களை கை கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தரைமட்டம் ஆக்குகின்றனர். இந்த வீடியோவை சில மாணவர்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி நடந்த பள்ளியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த தலைவர் கல்லட்கா பிராபகர் பாட் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
அவரிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, “நாங்கள் உச்சநீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கூறிய தீர்ப்பின் அனைத்து கருத்துக்களிலும் எங்களுக்கு உடன்பாடில்லை. சில முரண்பாடுகளும் உள்ளன. மாணவர்கள் செய்ததில் தவறு ஒன்றும் இல்லை. அவர்கள் தங்கள் வரலாற்று நிகழ்வாக எதைப்படித்தார்களோ அதையே செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சதானந்த கவுடாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்ட போது, தான் இருக்கும் போது அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
(Courtesy : The News Minute)