கர்நாடகா | குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட முதலை குட்டிகள்...
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெலகாவி மாவட்டம், அதானியின் தேவரதெரட்டி கிராமத்தில் அப்பாசாப் சத்யப்பா நாயக்காவுக்கு சொந்த விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச குளம் அமைத்துள்ளார். மழைநீர் இதில் சேகரிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த குளத்தில் பெரிய முதலை இருப்பதை பார்த்து, அப்பாசாப் அதிர்ச்சி அடைந்தார். முதலை சென்றுவிடும் என்று எண்ணினார். ஆனால், அது செல்லவில்லை.
இந்நிலையில், குளத்தின் கரையில் வித்தியாசமான மணல் மேடு இருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அருகில் சென்று தோண்டியபோது, முதலை முட்டைகளில் இருந்து குட்டிகள் தென்பட்டன. குழியை தோண்டத் தோண்ட, ஒவ்வொரு முதலை குட்டிகளாக வெளியே வந்தன. 50க்கும் மேற்பட்ட குட்டிகளை, கிராம மக்களே மீட்டனர். பின், வனத ;துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம், இப்பகுதி விவசாய நிலங்கள், கிணறு பகுதிகளில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விவசாயம் செய்ய செல்லவே பயமாக உள்ளது. எனவே, விவசாய நிலங்கள், கிணறுகள் அருகில் தென்படும் முதலைகளை மீட்டு, வேறு இடத்தில் விட வேண்டும் என்று கேட்டு கொண்டனர். பின்னர் பிடிபட்ட முதலை குட்டிகளை ஒப்படைத்தனர்.