21 ஆண்டுகளாக சாதிய வன்கொடுமை – பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் பரபரப்பு புகார் – பின்னணி என்ன?
பல விதங்களில் தன்னை சாதி ரீதியாக வன்கொடுமை செய்து வருவதாக மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா மீது புகார் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். முன்னதாகவே, மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், வீட்டை விட்டு ஒதுக்கி வைத்ததாக நேர்காணலில் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், காரைக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
வேறு சமூகத்தில் காதல் திருமணம் செய்யக் கூடாது:
அவர் கொடுத்த புகாரில், நான் கடந்த 2004-ம் ஆண்டு எனது விருப்பத்தின் பேரில் காதல் திருமணம் செய்து கொண்டேன். என் திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே என் தந்தை பழ.சின்னக் கருப்பையாவின் அண்ணனும், எங்கள் குடும்பத்தின் மூத்தவருமான பழ.கருப்பையா என்னை அழைத்து, நான் வேறு சமூகத்தில் காதல் திருமணம் செய்யக் கூடாது என்றார். அவ்வாறு செய்தால் அதன் மூலமாக நமக்கு சமூக பெருமைகள் இல்லாது போய்விடும் என்றும், அதை மீறி செய்தால் நம் குடும்பத்திற்குள்ளும் சுற்றத்தாரர்களுக்குள்ளும் என்னை தனிமைப்படுத்தி விடுவதாக மிரட்டினார்.
எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைக்கக் கூடாது:
என் பெற்றோர் சம்மதம் உள்ளதால் குடும்பத்தில் மூத்த உறுப்பினரான பழ.கருப்பையா சம்மதம் தேவையில்லை என்று கூறி காதல் திருமணம் செய்து கொண்டேன். மேற்படி 2004 முதல் இன்று வரை கடந்த 21 வருடமாக என் குடும்பம் மற்றும் உறவினர்களைச் சேர்ந்த எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைக்கக் கூடாது என்று அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார் பழ.கருப்பையா. தன் சொல்லை மீறி காதல் திருமணம் செய்த என்னை தனிமைப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக, சுய சாதிக்குள் திருமணம் செய்ய மறுத்து என் விருப்பத்திற்கு காதல் திருமணம் செய்த என்னை, தனிமைப்படுத்தி வீண் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது.
21 ஆண்டு காலமாகவே என்னை தனிமைப்படுத்தும் நோக்கில் சாதிய வன்கொடுமையை இன்று வரை தொடர்ச்சியாக பலவிதங்களில் பல நிகழ்வுகளில் செய்து வந்துள்ளார்:
அவர் சொல்லை மீறி எனது உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அவரது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தால் அந்த திருமணத்திற்கு தான் வரமாட்டேன் என்று ஏளனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பழ.கருப்பையா .இவ்வாறு தொடர்ச்சியாக 21 ஆண்டு காலமாகவே என்னை தனிமைப்படுத்தும் நோக்கில் சாதிய வன்கொடுமையை இன்று வரை தொடர்ச்சியாக பலவிதங்களில் பல நிகழ்வுகளில் செய்து வந்துள்ளார். எனக்கு திருமணம் நடப்பதற்கு முன்பிலிருந்து, திருமணம் நடந்து 21 ஆண்டு காலம் ஆன பின்னரும் கூட, என்னை தனிமைப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல காலகட்டங்களில் பல நிகழ்வுகளில் என்மீது சாதிய வன்கொடுமையை நடத்தி வருகிறார்.
பழ.கருப்பையா என்னை சாதிய வன்கொடுமை செய்து வருவதிலிருந்து தடுக்க வேண்டும்:
அதன் நீட்டிப்பாக காரைக்குடியில் அமைந்துள்ள எங்கள் பூர்வீக வீட்டில் பல இடங்களில் சேதமாகியுள்ளதை பழுது நீக்கி பராமரிப்பு செய்தால் நான் அந்த வீட்டில் புழங்கிவிடுவேன் என்ற காரணத்திற்காகவே, தானும் பழுது செய்ய முன்வராமல் மற்றொரு பங்குதாரரையும் பழுது செய்யவிடாமல், என்னையும் யாதொரு பராமரிப்பு வேலைகளையும் செய்யவிடாமல் பல வழிகளில் தடுத்து வருகிறார். பழ.கருப்பையா என்னை சாதிய வன்கொடுமை செய்து வருவதிலிருந்து தடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்கவும், அதை மீறி பழ.கருப்பையா எனக்கு தொந்தரவு கொடுத்தால் அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அரசியல் தலைவரான பழ.கருப்பையாவின் தம்பி மகனான கரு.பழனியப்பன், ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு நிகழ்வுகளில் பேசி இருந்தார். இந்த நிலையில்தான் இது சம்மந்தமாக காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முன்னதாகவே, தங்களது பூர்வீக வீட்டை தனது தம்பி இடித்து சேதப்படுத்துவதாக பழ.கருப்பையா புகார் கொடுத்த நிலையில், அதில் விளக்கம் கொடுக்கச் சென்ற கரு.பழனியப்பன், தனது பெரியப்பா பழ.கருப்பையா மீது புகார் கொடுத்துள்ளார்.