கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - கபில் சிபல்

கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - கபில் சிபல்
கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - கபில் சிபல்

கல்வி மற்றும் சுகாதாரத்தை பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று கபில் சிபல் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவாக, நீதி மற்றும் சமத்துவத்துக்கான சட்ட அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்து குழுமத் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில், என்.ராம், நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர் தனித்தனியே முன்வைத்த கேள்விகளுக்கு கபில் சிபல் விளக்கம் அளித்தார். ஆளுநரின் அதிகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தெரிவித்தார்.

“சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வை மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். என்னைப் பொறுத்தவரை கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கல்வியும் சுகாதாரமும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அப்போது தான் ஒரு மாநிலம் முழுமையடையும்” என்றார் கபில் சிபில்.

மேலும் “மத்திய அரசு பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதாகக் கூறினார். மாநிலங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து இயற்றக்கூடிய சட்ட முன்வடிவை அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டங்களும், பணக்காரர்களுக்கு உதவும் வகையில்தான் உள்ளது” என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நீட் விலக்கிற்கு இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநருக்கு மாநில அரசு அனுப்பியிருக்கும் நிலையில் கபில் சிபலின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com