‘இது ராகுல்காந்தி வாங்கித்தந்த ஷூ’ : வைரலாகும் கன்னியாகுமரி மாணவனின் போட்டோ

‘இது ராகுல்காந்தி வாங்கித்தந்த ஷூ’ : வைரலாகும் கன்னியாகுமரி மாணவனின் போட்டோ
‘இது ராகுல்காந்தி வாங்கித்தந்த ஷூ’ : வைரலாகும் கன்னியாகுமரி மாணவனின் போட்டோ

ராகுல் காந்தி அனுப்பி வைத்த ஸ்போர்ட்ஸ் ஷூ குறித்து கன்னியாகுமரி மாணவர் பதிவிட்ட ஃபோட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல்காந்தி கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மணவியர்களுடன் நடைபெறவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக தக்கலையில் இருந்து புறப்பட்டு பரைக்கோடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலை ஓரமாக நின்றிருந்த ஒரு மாணவன் கையில் காமராஜர் படத்துடன் கூடிய பதாகையை கையில் ஏந்தியபடி நின்றிருந்தார். இதை கண்ட ராகுல்காந்தி உடனடியாக காரில் இருந்து இறங்கி அந்த மாணவனை நோக்கிச் சென்று அவரை பற்றி விசாரிக்கத் தொடங்கினார். அதற்கு அந்த மாணவன் தனது பெயர் ஆன்றணி பெலிக்ஸ் என்றும் ஆறாம் வகுப்பு பயின்று வருவதாகவும், தனது தந்தை ஆன்றணி பரைக்கோடு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருவதாகவும் கூறினான்.

இந்நிலையில், அந்த மாணவனை அழைத்து கொண்டு கடையின் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்ற ராகுல்காந்தி டீ குடித்தபடியே அந்த மாணவனிடம் உனக்கு என்ன ஆர்வம் என கேட்க விளையாட்டில் ஆர்வம். அதுவும் ஓட்டத்தில் அதிக ஆர்வம் எனக் கூறவே ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டபடியே ஸ்போர்ட்ஸ் ஷூ ஒன்று வாங்கி தருவதாகவும் சிறந்த பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பதாகவும் உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அதையடுத்து நேற்று மும்பையில் இருந்து கூரியர் மூலம் ஆன்றணி பெலிக்ஸ் முகவரிக்கு பார்சல் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில், ஸ்போர்ட்ஸ் ஷூ இருந்துள்ளது. இதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த ஆன்றணி பெலிக்ஸ் அந்த ஷூவை அணிந்தபடி போட்டோ எடுத்து ராகுல் தந்த ஷூ என சமூக வலைதளத்தில் வெளியிட்டான். இது தற்போது வைரலாகி வருகிறது.

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி அனுப்பியுள்ள ஆன்றணி பெலிக்ஸ், விளையாட்டுத் துறையில் சாதித்து நிச்சயம் ராகுல் காந்தியை நேரில் சந்திக்க செல்வேன் என மகிழ்ச்சியாக கூறினான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com