கன்னியாகுமரி: குடிபோதையில் தொல்லை கொடுத்த மகன்: மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட தம்பதியர்
நாகர்கோவில் அருகே, மதுபோதையில் தொந்தரவு செய்த மகனால் தாய் தந்தை இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதூர், சீயோன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ ஜெயசிங் (68), அவரது மனைவி தங்கம் (65). இவர்களுக்கு சதீஷ், இயேசு ஜெபின் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்க்கு திருமணமான நிலையில், இயேசு ஜெபினுக்கு (32) திருமணம் ஆகாததால் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கூலித்தொழில் செய்யும் இயேசு ஜெபின் மதுபோதையில், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாய் தந்தையை துன்புறுத்தியதோடு வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியும் வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் இதேபோல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த செல்வ ஜெயசிங் தனது மூத்த மகன் சதீஷ் க்கு போன்செய்து இருவரும் இதற்கு மேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை என கூறிவிட்டு, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.