தகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது!
தகாத உறவு விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணை கடத்த திட்டமிட்ட போலி பெண் காவலர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் பணி புரிபவர் கிஷோர். இவர், ஏற்கெனவே திருமணமான வதனி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. திடீரென தன்னுடன் வேலை பார்க்கும் சுபாஷினி என்ற பெண்ணுடன் கிஷோருக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வதனி தனது தோழிகளின் உதவியை நாடியுள்ளார். சென்னை பாடியில் அழகு நிலையம் வைத்திருக்கும் முத்துலட்சுமி, காவலர் உடையணிந்து சுபாஷினியை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக நேற்று காலை வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு மேலும் இரண்டு பெண்களுடன் கிண்டி ரயில் நிலையம் வந்துள்ளார். வழக்கம் போல் வேலைக்கு வந்த சுபாஷினியிடம், விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி இரண்டு பெண்கள் சுபாஷினியை வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர்.
சுபாஷினி கூச்சலிட்டதால் பொதுமக்களும் ரயில்வே போலீசாரும் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்ற பெண்களை பிடிக்கத் துரத்தி உள்ளனர். இதில் வாடகை கார் ஓட்டுநர் ஜீவானந்தம் போலீசாரிடம் சிக்கினார். மேலும் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் சுபாஷினி புகார் அளித்தார். பிடிபட்ட ஓட்டுனர் ஜீவானந்தத்திடம் விசாரணை செய்ததில் காவலர்கள் என நினைத்து பெண்களை அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஜீவானந்தம் கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று போலி பெண் காவலர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது தோழி வதனிக்கு உதவுவதற்காக போலியாக காவலர் உடையணிந்து, சுபாஷினியை கடத்தி மிரட்ட திட்டமிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து போலி பெண் காவலர்கள் மூன்று பேர் உட்பட ஜீவானந்தம், பாலகுரு ஆகியோரையும் கிண்டி போலீசார் கைது செய்தனர்.