போலீஸுக்கு தகவல் கொடுத்தவரின் குடும்பத்தை வெட்டிய கஞ்சா கும்பல்
சென்னையில் கஞ்சா விற்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தவரின் குடும்பத்தினரை கஞ்சா விற்பனை கும்பல் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகர் 3வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் புஷ்வல்லி (37). இவருக்கு பவுல்ராஜ் (20), செவ்வந்தி (17), தனுஷ் (15) என இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அம்பேத்கர் நகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பதாக பவுல்ராஜ் பலமுறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலின் தலைவன் விக்கி (23) ஆத்திரமடைந்து பவுல்ராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இன்று பெண்கள் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு புகுந்து, தனியாக இருந்த செவ்வந்தி மற்றும் தனுஷ் ஆகியோர் மீது மிளகாய் பொடி வீசி கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த செவ்வந்திக்கு காதில் 5 தையல் போடப்பட்டுள்ளது. சிறுவன் தனுஷ் தலையில் வெட்டுக்காயத்துடன் ராயபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டில் பவுல்ராஜ் இருந்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பார் எனக் கூறப்படுகிறது. போதை பொருட்களை விற்கும் கும்பல் குறித்து பவுல்ராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்த விவரத்தை, போலீசாரே அந்தக் கும்பலிடம் தெரிவித்ததாக ஆதம்பாக்கம் மக்கள் மற்றும் பவுல்ராஜ் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். போதை பொருட்கள் விற்பவர்களை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்திருந்தால், தற்போது இந்த வெறிச்செயல் நடந்திருக்காது என்று கூறுகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பிலிருந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.