பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? - மக்களவையில் கனிமொழி ஆவேசம்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி கடந்த வாரம் தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தந்தை லத்தீஃப் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது என திமுக எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களவையில் பேசிய கனிமொழி, “இந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர்கூட கைதாகவில்லை. எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் பாத்திமா கூறிய பேராசிரியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பாத்திமா தற்கொலை குறித்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், பாத்திமாவின் அறைக்கு சென்ற போது அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யப்படிருந்தது.
ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவர் தூக்குமாட்டிக்கொள்ள பயன்படுத்திய கயிறு கூட அங்கு இல்லை. கல்வி நிலையங்களில் சாதி மற்றும் மத ரீதியிலான பாகுபாட்டிற்கு இடமளிக்கக் கூடாது. உயர்கல்வி நிலையங்களில் பாகுபாடு தொடர்பாக இதுவரை 72 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதிக மாணவர்கள் உயிரிழக்கும் இடமாக ஐஐடி மாறி வருகிறது. மாணவர்கள் தற்கொலை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்” எனத் தெரிவித்தார்.