‘கர்ஜனை மொழி கனிமொழி’; அண்ணனின் மனசாட்சி.. திமுகவின் டெல்லி முகம்.. கனிமொழி கடந்து வந்த பாதை!

கலைஞர் கருணாநிதியின் மனசாட்சியாகவும் திமுகவின் டெல்லி முகமாகவும் கடந்த காலத்தில் இருந்தவர் முரசொலி மாறன். இனிவரும் காலங்களில் அண்ணன் ஸ்டாலினின் மனசாட்சியாகவும் திமுகவின் டெல்லி முகமாகவும் இருக்கப்போகிறார் கனிமொழி.
கனிமொழி
கனிமொழிpt web

கனிமொழி

மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி எம்.பி, திமுக தலைமையால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.ஏற்கெனவே, நாடாளுமன்றக் குழு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த கனிமொழிக்கு, இது புரோமோஷனாகவே பார்க்கப்படுகிறது. மறைந்த முரசொலி மாறனுக்குப் பிறகு இரண்டு அவைகளுக்கும் சேர்த்து தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. கட்சியில் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் தலைவர் என அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார் கனிமொழி. இந்தநிலையில், அவர் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.

வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், சிறுவயதில் இருந்தே, கலை, இலக்கிய ஆர்வம் கொண்டவராகவும் சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவராகவும் திகழ்ந்தார் கனிமொழி. ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய கனிமொழி, கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்கிற இணையதளத்தையும் நடத்தி வந்தார்.

அதேபோல, 2006 சட்டமன்றத் தேர்தலின்போதே, தனது தந்தை கருணாநிதியுடன் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார் கனிமொழி. தொடர்ந்து, ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், சென்னை சங்கமம் நிகழ்வு என தமிழ் அரசியல், பண்பாட்டுக் களத்தில் மிகத் தீவிரமாகச் சுழன்று வந்தார் கனிமொழி.

கனிமொழி
உருவானது புதிய ஒருங்கிணைப்புக் குழு.. கிரீன் சிக்னல் காட்டிய OPS, சசிகலா; EPS என்ன செய்ய போகிறார்?

கனிமொழி வகித்த பொறுப்புக்கள்

அதேவேளை, திமுகவில் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் தலைவர் பொறுப்பை வகித்தவந்தார் கனிமொழி. 2007-ம் ஆண்டு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக முதல்முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் கனிமொழி. தொடர்ந்து, 2013-ம் ஆண்டு இரண்டாவது முறையாக மாநிலளங்களவை உறுப்பினரானார். தொடர்ந்து, 2015-ம் ஆண்டு திமுக மகளிரணிச் செயலாளரானார் கனிமொழி.

மாநிலங்களவையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த கனிமொழிக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை வழங்கியது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட, 3 லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் கனிமொழி. திமுக நாடாளுமன்றக் குழு துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளை, மகளிரணி சார்ந்தும் மிகத் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுத்தார் கனிமொழி.

குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில், திமுக மகளிரணி நிர்வாகிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். சென்னையில் ஐ.டி துறையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணின் தந்தை, சொந்த ஊரில் இறந்துவிட, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் அவரை சொந்த ஊருக்குக் கூட்டிப் போய்ச் சேர்த்தனர். அந்தளவுக்கு மாநிலம் கடந்தும் மகளிரணியின் செயல்பாடுகள் மிளிர்ந்தன. அதற்கு பக்கபலமாக கனிமொழியே இருந்தார்.

கர்ஜனை மொழி கனிமொழி

மு.க.ஸ்டாலின், கனிமொழி
மு.க.ஸ்டாலின், கனிமொழிpt web

அடுத்ததாக 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தது. 160 தொகுதிகள், 700 பொதுக்கூட்டங்கள் என சூறாவளிப் பிரசாரம் செய்தார் கனிமொழி. 2020 நவம்பரில் தொடங்கிய அவரின் பிரசாரம், ஏப்ரல் 2-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகும் வரை நீடித்தது. அவரின் எளிமையான பிரசார யுக்தி மகளிர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அதேபோல, ‘இந்தி தெரியாது போடா’ போன்ற பிரசார யுக்திகளும் இளைஞர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, அக்டோபர் 9, 2022-ல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் கனிமொழி. “‘டெல்லியிலே ஒலிக்கக் கூடிய கர்ஜனை மொழி கனிமொழி’ புதிதாக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்” என அடைமொழியோடு அறிவித்தார், கட்சியின் தலைவரான மு.கஸ்டாலின்.

தொடர்ந்து, மகளிரணியில் இல்லாவிட்டாலும்கூட மகளிரணித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் கனிமொழி. அதுமட்டுமல்லாது, INDIA கூட்டணியின் முக்கிய பெண் தலைவர்களை எல்லாம் அழைத்துவந்து சென்னையில் மகளிரணி மாநாட்டையும் நடத்தி முடித்தார். தொடர்ந்து, 2024 தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யாரும் டெபாஸிட் பெறாத அளவுக்கு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

கனிமொழி
இனி கூட்டணிதான்... விஜயகாந்த், பவன் கல்யாண் பாணி - பாதையை மாற்றுகிறாரா சீமான்?

அண்ணனின் மனசாட்சி, திமுகவின் டெல்லி முகம்

மத்தியில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்திருக்கிறது பாஜக. INDIA கூட்டணியும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு என்பது மிக முக்கியமானதாக இருக்கும்.எதிர்க்கட்சித் துணைத் தலைவராக கனிமொழி தேர்வாக இருக்கிறார் என்கிற செய்திகள்கூட வெளியானது.

இந்தநிலையில், இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கனிமொழி தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கலைஞர் கருணாநிதியின் மனசாட்சியாகவும் திமுகவின் டெல்லி முகமாகவும் கடந்த காலத்தில் இருந்தவர் முரசொலி மாறன். இனிவரும் காலங்களில் அண்ணன் ஸ்டாலினின் மனசாட்சியாகவும் திமுகவின் டெல்லி முகமாகவும் இருக்கப் போகிறார் கனிமொழி.

கனிமொழி
கரடுமுரடான அரசியல் களம்... 25 ஆண்டுகால கனவான அரசியல் அங்கீகாரம்... விசிக சாதித்த வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com