டன் கணக்கில் வந்திறங்கிய மலர்கள்.. விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்; படையெடுக்கும் பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகன், வள்ளி தெய்வானை வேடங்கள் அணிந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நாளை மாலை கோவில் முன்புள்ள கடற்கரையில் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள விழாவிற்காக இன்றைய தினமே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக கோவில் நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவிலில் முன்பக்க வாயிலில் சிறப்பு தோரணம் கட்டுவதற்காக மலர்கள் கொண்டு தோரணங்கள் கட்டும் பணிகள் கோவில் சண்முக விலாச மண்டபத்திற்குள் தொடங்கியது. செவ்வந்தி, சம்பங்கி, கிரேந்தி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் 2 டன் எடை கொண்ட மலர்கள் கொண்டு தோரணம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அன்னாசிப் பழம், ஆரஞ்சு பழம், கரும்பு மற்றும் சோளக்கதிர்கள் கொண்டு சிறப்பு தோரண அலங்காரம் செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் முருகன், வள்ளி, தெய்வானை, நாரதர், அசுரன், பெருமாள், சிவபெருமாள், பார்வதி என முருகன் குடும்பத்தினரை பக்தர்கள் பார்க்கும் வண்ணம் மிகவும் தத்ரூபமாக வேடங்கள் அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களை பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், முருகன் சூரனை அழிப்பது சம்காரம் அல்ல. நமது மனங்களில் உள்ள தீய எண்ணங்களை அழிப்பதே சம்காரம். நாங்கள் வருடம் தோறும் இதேபோல் வேடங்கள் அணிந்து கோவிலுக்கு வருகை தருகிறோம். அனைத்து வருடங்களையும் விட இந்த ஆண்டு ஏற்பாடுகள் நன்றாக உள்ளதாக தெரிவித்தனர்.

