ரோஜாவுக்கு நீதி கேள் : கொதிக்கும் தமிழகம் !

ரோஜாவுக்கு நீதி கேள் : கொதிக்கும் தமிழகம் !

ரோஜாவுக்கு நீதி கேள் : கொதிக்கும் தமிழகம் !
Published on

காஞ்சிபுரத்தில் இளம்பெண் ரோஜா மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் நீதிகேட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தில் காலனி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரோஜா. இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கக்கூடிய தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோஜா கருத்தரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் இடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஜா கேட்டிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்த ராஜேஷ், ஒரு வாரத்திற்கு முன்பு ரோஜாவை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் கிராமத்தில் உள்ள சசிகலா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து போனது ரோஜா என்று தெரியவந்தது. இதையடுத்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடலை பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்த ரோஜா உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, பிறகு கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சசிகலாவின் தோட்டத்துக்குள் உள்ள மரத்தில் அவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தங்கள் மகள் இறப்பிற்கு காரணமானவரை உடனே கைது செய்ய் வேண்டும் என வலியுறுத்தி ரோஜாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதையடுத்து காரை பகுதியைச் சேர்ந்த ராஜேஷை போலீசார் கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. உயிரிழந்த ரோஜாவை அவர் காதலித்ததாகவும், அப்பெண் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே, கொலையா ? அல்லது தற்கொலையா ? என்ற உறுதியான தகவல் கிடைக்கும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். #JusticeForRoja என்ற ஹேஷ்டேக் மூலம் நீதிகேட்டு பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com