வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக மூதாட்டிக்கு குறுஞ்செய்தி... VAO-வை அலறவிட்ட MLA! நடந்தது என்ன?

மகளிர் உரிமத்தொகை விண்ணப்பித்த மூதாட்டிக்கு வருமானவரி தாக்கல் செய்துள்ளதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இதைகேட்ட எம்.எல்.ஏ-வும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எம்.எல்.ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்
எம்.எல்.ஏ வை முற்றுகையிட்ட பெண்கள் file image

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட  கீழ்கதிர்பூர், மேல்கதிதிர்பூர், மேல் ஒட்டிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலை கடை, புதிய அங்கன்வாடி மையம், புதிய தார்ச் சாலை அமைத்தல்,  பள்ளிகளுக்குச் சுகாதார நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் கீழ்கதிர்பூர் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அப்போது கீழ்கதீர்பூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமத்தொகை  கிடைக்கவில்லை  எனக் கூறி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அங்குக் கூடியிருந்த பெண்கள் சிலர் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைக்  கேட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ எழிலரசன்
எம்.எல்.ஏ எழிலரசன்

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ எழிலரசன், “பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகக் கூறி ஏமாற்றிய பிரதமர் மோடி அரசாங்கத்தை ஏன் நீங்கள் கேள்வி கேட்கவில்லை? அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே” எனக் கடிந்து கொண்டார். உடனே கூட்டத்திலிருந்த ஒரு மூதாட்டி, “பிரதமர் மோடியை இங்கே வரச் சொல்லுங்கள் கேட்கிறோம். நீங்கள்தானே எங்களிடம் வந்திருக்கிறீர்கள். அதனால்தான் கேட்கிறோம்” எனக் கேட்டுள்ளார்.

எம்.எல்.ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்
#Exclusive | Hamas அமைப்பினர் முதன்முதலாக தாக்குதல் நடத்திய இடத்திலிருந்து பிரத்யேக தகவல்

இதனையடுத்து மூதாட்டி ஒருவர் “எனக்கு உரிமைத்தொகை வரவில்லை” எனக் கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்று எம்.எல்.ஏ கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி கூறிய பதிலைக் கேட்டு எம்.எல்.ஏ அதிர்ச்சியடைந்தார். “நான் வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனால் எனக்குப் பணம் கிடைக்காதாம்” எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ எழிலரசன், கிராம நிர்வாக அலுவலரிடம், "இவரைப் பார்த்தால் வருமான வரித்துறை கட்டுவது போல் தெரிகிறதா? இதனைச் சரியாக ஆய்வு செய்ய மாட்டீர்களா? உங்கள் மீது நிர்வாக ரீதியாக பணியிட நீக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?” என எச்சரித்தார்.

பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் எம்.எல்.ஏ எழிலரசன்
பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் எம்.எல்.ஏ எழிலரசன்

பின்னர் “மகளிர் உரிமத்தொகை விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் சரிபார்த்து அவர்களுக்குப் பணம் போய்ச் சேர்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

எம்.எல்.ஏ வை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்
குவாரி ஏலத்தில் அதிகாரிகளை தாக்கியதாக புகார் - திமுகவினர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com