சென்னை வந்து சேர்ந்தது தற்கொலை செய்துகொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடல்
கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ரவுடி ஸ்ரீதரின் உடல் இன்னும் குடியுரிமை அதிகாரிகளின் சான்று அளிக்கப்படாததால் சரக்கு கையாளும் மையத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் உடல் நீண்ட இழுபறிக்குப் பிறகு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மீது ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில், கம்போடியாவில் கடந்த 4ஆம் தேதி அவர் தற்கொலை செய்து உயிரிழந்ததாகத் தெரிகிறது. கம்போடியாவில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீதரின் உடல் கோலாலம்பூர் கொண்டு வரப்பட்டது. பிறகு அங்கிருந்து சென்னைக்கு இன்று காலை10.30 மணியளவில் வந்து சேர்ந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர் கம்போடியா சென்றதாக கூறப்படுவதால், அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டியுள்ளதாகவும், ஏற்கனவே ஸ்ரீதரின் 181 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதால், அவரது உடலில் இருந்து மரபணு மற்றும் கைரேகை ஆதாரங்களை அமலாக்கத் துறை சேகரிக்க வேண்டியுள்ளதாக கூறப்பட்டது. எனவே, அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைப்பது தாமதமானது. 7 மணி நேர இழுபறிக்குப் பிறகு குடியுரிமை அதிகாரிகளால் காவல்துறையினரிடம் ஸ்ரீதரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் அவரது உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளது.