“கரடு முரடான சாலையை சரிசெய்க” - காஞ்சி வரதரை தூக்கிச்செல்லும் பாதம் தாங்கிகள் கோரிக்கை
வரதரை பல்லக்கில் தூக்கிச்செல்லும் பாதம் தாங்கிகள் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரிசெய்ய, கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கோயிலுக்குச் சென்று பல்வேறு வேண்டுதலுக்காக தெய்வங்களை வழிபட்டு தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் தன்னை காண இயலாத பக்தர்களுக்காக காஞ்சி வரதராஜ பெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களை தேடி பல்லக்கில் சென்று பல கிராம பக்தர்கள் செய்யும் மரியாதையை ஏற்று அருள் பாலிப்பார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வருகிற சனிக்கிழமை அன்று வரதர் கோயிலில் இருந்து காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையம் வழியாக வையாவூர் சென்று ராஜ குளத்தில் தெப்பத் உற்சவர் திருவிழாவிற்காக புறப்பட இருக்கிறது. ஏறத்தாள வரதர் கோயிலிலிருந்து ராஜ குளத்திற்கு சென்றுவர சுமார் 20 கிமீ தூரம் இருக்கும்.
சாமியை சுமந்து செல்லும் பாதம் தாங்கிகள் காலில் செருப்பு கூட அணியாமல் பல்லக்கை தூக்கிச் செல்வர். தற்போது சாமி செல்லும் சாலைகள் பல இடங்களில் சேறும் சகதியுமாக இருக்கிறது. தார்ரோடு பெயர்ந்து கூர்மையான சரளைக் கற்கள், பாதம் தாங்கிகளின் பாதத்தை பதம்பார்க்க காத்துக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி புறப்படும் போது உடன் செல்வார்கள். பொது மக்களின் நன்மை கருதி படுமோசமாக இருக்கும் சாலையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதம் தாங்கிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்