காஞ்சிபுரத்தில் சிறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சிறு, குறு விவசாயிகள், மத்திய அரசின் திட்டத்தில், 6,000 ரூபாய் உதவித்தொகை பெற, இன்றே விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டத்தில், தகுதி வாய்ந்த சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு, மத்திய அரசு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. மூன்று தவணைகளாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதி வாய்ந்த சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் தற்போது விவசாயிகளின் பார்வைக்காக, கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் விடுபட்ட விவசாயிகள், தங்கள் ஆவணங்களை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், இன்று மாலைக்குள் சமர்ப்பித்தும், சுய உறுதி மொழி கையொப்பமிட்டும் பதிவு செய்து கொள்ளுமாறு, காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.கிராம நிர்வாக அலுவலரிடம், பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு நகல், மொபைல் எண் ஆகியவை வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டம் குறித்து, இன்னும் பல விவசாயிகளுக்கு தெரியாமல் உள்ளது. இந்நிலையில், இன்று மாலைக்குள், கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, சுய உறுதிமொழி கையொப்பமிட வேண்டும் என, ஒரு நாள் முன்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பை ஒரு வாரத்திற்கு முன்பாவது வழங்க வேண்டாமா என, விவசாய சங்க பிரதிநிதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.