சமூக விரோதிகளின் கூடாரமாகும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்: முழுமையான ரிப்போர்ட்

சமூக விரோதிகளின் கூடாரமாகும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்: முழுமையான ரிப்போர்ட்
சமூக விரோதிகளின் கூடாரமாகும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்: முழுமையான ரிப்போர்ட்

பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில், அவரது பெயரில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் உயர்ந்த சேவையை வழங்காமல், பயணிகள் மற்றும் பொது மக்கள் விரோத செயல்களுக்கு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம், இருப்பிடமாக இருந்து கொண்டிருக்கிறது. இதுபற்றிய முழுமையான தொகுப்பு.

ஒரு புறம் இந்த பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில், குடிகாரர்கள் காலை முதல் இரவு வரை மது அருந்தி வருகிறார்கள். மறுபுறம், பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களும் காவலர்களும் இல்லாத காரணத்தினால், திருடர்களும், சமூக விரோதிகளும் பொது மக்கள் விரோத செயல்களில் எந்தத் தடையுமின்றி சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றொருபுறம் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் தொந்தரவு அளிக்கும் வகையில் திருநங்கைகளும், சாட்டை அடித்துக் கொண்டு யாசகம் பெரும் சிறுவர்களும் பொதுமக்களிடம் வற்புறுத்தி பணம் கேட்டுத் தொந்தரவு செய்கிறார்கள் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள பிரசித்தி பெற்ற சித்திரகுப்தர் கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கும் குடிகாரர்களில் பெரும்பாலானோர், பேருந்து நிலையத்தில் உத்திரமேரூர் மற்றும் செய்யாறு பேருந்துகள் நிற்கும் இடத்தில் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையான ஒன்று. இப்பகுதியில் குடிகாரர்கள் மதுபானம் அருந்துவதால், அப்பகுதியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிறது.  எனவே செய்யாறு பேருந்துகள் அனைத்தும் அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படாமல் சற்று தள்ளியே நிறுத்தப்படுவதால், மிகப் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திருடர்கள் பயணிகளின் கைபேசி, நகை, பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும் உட்பகுதியில் போதுமான அளவிற்கு மின் விளக்குகளை இயக்காமல் இருப்பதால், போதிய அளவு வெளிச்சம் இல்லாததால் திருட்டு அதிகம் நடக்கிறது. பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள், சமூக விரோத செயல்களுக்கு அனைத்திற்கும் காரணம் நகராட்சியின் அலட்சியம், கண்காணிப்பு கேமராக்களும் காவலர்களும் இல்லாததே காரணமாகும்.

காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 550 முதல் 650 பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது, நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் பேருந்து நிலையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், காவலர்களும் கண்காணிப்பு கேமராக்களும் பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக இல்லாமல் இருப்பது, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாக்குகிறது.

பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போதுமான அளவிற்கு மின் விளக்குகளை இயக்க வேண்டும், அதிக அளவில் கழிப்பறைகளை நிறுவி அதை முறையாகப் பராமரிக்க வேண்டும். தேவையுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com