காஞ்சிபுரம்: சிறுமி தற்கொலை; போலீஸ் தீவிர விசாரணை
ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் கடந்த ஒரு வருடமாக செல்போனில் திகில் படம் பார்த்து வந்த 14 வயது சிறுமி, மனஅழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் நகருக்கு உட்பட்ட ஓரிக்கை வேளிங்கப்பட்டரை கலைஞர் தெரு சின்னசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கோட்டீஸ்வரன்- கீதா தம்பதியர். கோட்டீஸ்வரன் பாரத் ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்சூரன்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு ரக்ஷனா என்ற 14 வயது மகளும் தர்மேஷ் என்ற 12 வயது மகனும் உள்ளனர்.
செவிலிமேடு பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ரக்ஷனா தற்போது 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் ரக்ஷனா ஆன்லைன் வழி கல்வியே பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1 வருடமாக வீட்டிலேயே ஆன்லைன் மூலம் கல்வி பயில்வதும் மற்ற நேரங்களில் திகில் திரைபடங்களை பார்ப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தனக்கு பயமாக இருப்பதாகவும், அமானுஷ்யம் தொடர்பாக கனவுகள் வருவதாகவும் ரக்ஷனா தனது பெற்றோர்களிடம் கூறி வந்ததாக குடும்பதார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் ரக்ஷனா தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர் படுக்கை அறைக்கு சென்றபோது ரக்ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது ரக்ஷனா ஏற்கெனவே உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து சிறுமி தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.