\
Kamaraj to Vijay 70 Years of Midday Meal Scheme
cm vijaycmotamilnadu/x

காமராஜர் டூ விஜய்.. 70 ஆண்டு சத்துணவுத் திட்டப் பயணம்.. ஒரு பார்வை!

இதன்மூலம் மாணவர்களின் பசியைப் போக்குவது மட்டுமின்றி, ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டம் 70 ஆண்டுகள் கடந்து விரிவுபடுத்தப்பட்டு ஏழை, எளிய மாணவர்களின் பசியை போக்கி வருகிறது இந்த நிலையில், விரிவான காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கிவைத்தார். இந்த நிலையில், இத்திட்டத்தின் வளர்ச்சி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...

தமிழகத்தின் பள்ளி உணவுத் திட்டம் என்பது ஒரே காலகட்டத்தில் உருவான திட்டம் அல்ல. பல்வேறு ஆட்சிக் காலங்களில் அடுத்தடுத்த மாற்றங்களையும், ஊட்டச்சத்து மேம்பாடுகளையும் பெற்று இன்று மிகப்பெரிய சமூகநலத் திட்டமாக வளர்ந்துள்ளது.

1956 -காமராஜர் ஆட்சிக்காலத்தில்

பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி, ஏழைக் குழந்தைகளும் பள்ளிக் கல்வியைத் தொடர வேண்டும் என்ற நோக்கில், காமராஜர் தலைமையிலான ஆட்சியில் மதிய உணவு திட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்டது. தொடக்கத்தில்1,300 உணவு மையங்கள் மூலம் 65,000 மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.

காமராஜர்
காமராஜர்pt web

1982 -எம் ஜி ஆர். ஆட்சிக்காலத்தில்

அடுத்த முக்கிய திருப்பமாக, 1982-இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டு,சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது. இதன்மூலம் மாணவர்களின் பசியைப் போக்குவது மட்டுமின்றி, ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில்

சத்துணவுத் திட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில், மாணவர்களின் புரதச்சத்து தேவையை கருத்தில்கொண்டு முட்டை வழங்கும் நடைமுறை வலுப்படுத்தப்பட்டது. முட்டை வழங்கும் நாட்கள் வாரத்திற்கு 3 நாட்களில் இருந்து 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டதுடன், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது.

ஜெயலலிதா
ஜெயலலிதாPt web

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்

சத்துணவுத் திட்டத்தில் உணவின் வகைகளையும், ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக,13 வகையான கலவை சாதங்கள் மற்றும் நான்கு வகையான மசாலா முட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம் மாணவர்களுக்கு ஒரே வகையான உணவு வழங்கப்படுவதைத் தவிர்த்து, பல்வகை உணவு முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

2022 - மு.க ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில்

பள்ளி உணவுத் திட்ட வரலாற்றில் மற்றொரு முக்கிய அத்தியாயமாக 2022 செப்டம்பர் 15இல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1,14,095 மாணவர்களுக்கு 33.56 ரூபாய் கோடி செலவில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

2025 -2026 உணவுத் திட்டம் விரிவாக்கம்

தற்போது காலை உணவுத் திட்டம் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 20.59 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் அளவுக்கு விரிவடைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு 600 கோடி ரூபாயையும் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ 2,602 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகள் கடந்தும் தமிழக மாணவர்களின் பசியைப் போக்கும் 65 ஆயிரம் மாணவர்களுடன் தொடங்கிய சத்துணவுத் திட்டப் பயணம் இன்று 20.59 லட்சம் மாணவர்களை காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. 1956-ல் காமராஜர் காலத்தில் பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி கல்வியைத் தொடரச் செய்வதை நோக்கமாகக் கொண்டு மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், 1982-ல் எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக புதிய பரிமாணம் பெற்றது. அதன்பிறகு கருணாநிதி ஆட்சியில் முட்டை உள்ளிட்ட புரதச்சத்து உணவுகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் பல்வகை உணவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தத் தொடர்ச்சியில், 2022-ல் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது 20.59 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களை சென்றடையும் அளவுக்கு விரிவடைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com