காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87 ஆவது தலைவராக ராகுல்காந்தி இன்று முறைப்படி பதவி ஏற்றார். நேரு குடும்பத்தின் 6 ஆவது தலைவராக பதவியேற்றுள்ள அவருக்கு சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் காங்கிரஸை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ‘வாழ்த்துகள். உங்களை பற்றி உங்கள் பதவி தீர்மானிக்காது. ஆனால் நீங்கள் உங்கள் பதவியை வரையறுக்கலாம். உங்கள் குடும்ப முன்னோர்களை கண்டு நான் பெருமை அடைந்திருக்கிறேன். நீங்களும் கடுமையாக உழைத்து எனது பெருமைக்கு உரியவர் ஆவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் தோள்களுக்கு பலம் சேர்ந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.