"ஸ்பெல்லிங் வேறாக இருக்கலாம்.. ஆனால் நீலமும் மய்யமும் ஒன்றுதான்"- நீலம் விழாவில் கமல்ஹாசன்

"ஸ்பெல்லிங் வேறாக இருக்கலாம்.. ஆனால் நீலமும் மய்யமும் ஒன்றுதான்"- நீலம் விழாவில் கமல்ஹாசன்
"ஸ்பெல்லிங் வேறாக இருக்கலாம்.. ஆனால் நீலமும் மய்யமும் ஒன்றுதான்"- நீலம் விழாவில் கமல்ஹாசன்

“சாதி தான் என் முதல் அரசியல் எதிரி. இதை நான் என் 21 வயதிலேயே சொல்லிவிட்டேன்” “ஸ்பெல்லிங் தான் வேறு. மய்யமும் நீலமும் ஒன்று தான்” என்று பேசியுள்ளார் நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பக புத்தக அரங்கை சென்னை எழும்பூரில் மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்  திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “உயிரே உறவே தமிழே - என்று நான் மேடைகளில் பேசுவது  அலங்காரத்திற்காக அல்ல. ரஞ்சித் நிறைய சினிமா எடுத்திருக்கிறார். ஆனால் அதன் விழாக்களில் நான் பங்கேற்றதில்லை. இந்த விழாவில் பங்கேற்றதன் காரணம், எங்களுக்குப் பின்னும் இந்த புத்தகங்கள் இருக்கும் என்பதால்தான். நம் சரித்திரத்தை சொல்லும் போது நீலம் இருந்தது என பல நூற்றாண்டுகளுக்கு பேசுவார்கள்.

அரசியலை பொறுத்தவரை, சாதி தான் என் முதல் அரசியல் எதிரி. இதை நான் என் 21 வயதிலேயே சொல்லிவிட்டேன். ஆளுங்கட்சி என்ற வார்த்தையே வருங்காலத்தில் இல்லாமல் போக வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்றே இருக்கவேண்டும்.

ஸ்பெல்லிங் தான் வேறு... மற்றபடி மய்யமும் நீலமும் என்னைப்பொறுத்தவரை ஒன்று தான். மய்யம் பத்திரிகையை தொடங்கியபோது, பெரியளவில் அரசியல் அழுத்தங்கள் கிடையாது. ஆனால் பத்திரிகைகள் தொடங்கி அரசியல்வாதியாகிய பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. நீலம் பதிப்பகத்துக்கும், ரஞ்சித்திற்கும் என் வாழ்த்துகள். அவர் நண்பர்களுக்கும் இங்குள்ள என் சகோதர சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்கள். பத்திரிகை நடத்துகையில் தடங்கல்கள் நிறைய வரும். ஆனால் அவற்றை மீறி பயணிக்க வேண்டும். இங்கிருந்து அறிவு பெறப்போகிறவர்கள் எத்தனை பேரோ.. எத்தனை அயோத்திதாச பண்டிதர்கள் இங்கிருந்து உருவாகப் போகின்றனரோ... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!” என்று பேசினார்.

பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “நேற்று தான் கமல் சாரை சென்று சந்தித்தேன். உடனடியாக நிகழ்ச்சிக்கு வர இசைவு தெரிவித்துவிட்டமைக்கு என் நன்றி. இவரது எழுத்துக்கு நான் ரசிகன். அவரது எழுத்தைக் கண்டு நான் வியக்கிறேன். டிஜிட்டல் சினிமாவை தொட பலரும் தயங்கிய காலகட்டத்தில், அதை செய்து காட்டியவர் அவர்.

வியாபார நோக்கில் மட்டும் இல்லாமல் கலைக்காக பல முயற்சிகள் செய்துள்ளார். தன் வாழ்நாளில் தொடர்ந்து பல வித்தியாசமான முயற்சிகளை சினிமாவில் கொடுத்து வருபவர் கமல்ஹாசன். புத்தகங்கள் ஒருவனது வாழ்வை மாற்ற முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம். காட்சிகளால் காண்பிக்க முடியாததை, எழுத்து கச்சிதமாக செய்யும் என்பதை நான் நம்புகிறேன். அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய புத்தகங்களைத் தான் இந்த புத்தக அரங்கில் நாங்கள் வைத்திருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com