கலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்?
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி அங்கு இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்தச் சிலையை புனரமைக்கும் வேலை நடந்து வந்தது. புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அண்ணா அறிவாலயத்தில் ஒரே இடத்தில், டிசம்பர் 16ம் தேதியான இன்று திறக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் எனவும் திமுக தெரிவித்தது.
அதன்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, விழாவில் பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்று, வாழ்த்துரை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என இரு தினங்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகின. ஆனால் கமல்ஹாசன் கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சார்ந்த சில நிகழ்ச்சிகளுக்கு கமல்ஹாசன் ஏற்கெனவே நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், மதுரையில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளைதான் மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.