ராதாரவியை தற்காலிகமாக நீக்கிய திமுகவுக்கு பாராட்டுகள்: கமல்ஹாசன்
நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்து கூறிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய திமுகவுக்கு பாராட்டுகள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. முதல் கட்ட வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில் தான் போட்டியிடவில்லை என்று அவர் அறிவித்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தனக்கு தயக்கம் இல்லை என்றும் வேலை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பல்லாக்கில் நான் பவனி வர விரும்பவில்லை இந்த பல்லாக்குக்கு தோள் கொடுக்க விரும்புகிறேன். அதுவே என் வேலை. நான் பின்வாங்கிவிட்டதாக கூறப்படும் விமர்சனம், வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். என் கொல்கத்தா பயணம் அரசியல் ரீதியானது. மம்தாவை சந்திக்கவே அங்கு செல்கிறேன். சந்திப்புக்கான காரணத்தை வந்து சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
நடிகை நயன்தாரா தொடர்பான ராதாரவியின் சர்ச்சைக் கருத்து குறித்து பேசிய கமல்ஹாசன், நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்து கொண்டு இப்படி பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு திமுகவுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

