உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு? - கமல்ஹாசன்
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மதுபானக் கடைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தைவிட குறைவான நோய்த் தொற்று உள்ள அண்டை மாநிலங்களின் எல்லையில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குவிகிறார்கள் என மக்கள் மீது பழிபோட்டு, ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது நியாயமானதல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், '' கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு'' என குறிப்பிட்டுள்ளார்.