மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் - கமல்ஹாசன்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் - கமல்ஹாசன்
மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் - கமல்ஹாசன்

மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை குறிவைக்கிறது என்றும் விவசாயிகளை சிரமத்தில் ஆழ்த்தும் இச்சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

''உலகமே பசுமை விவசாயத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசல், ஹைட்ரோ கார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சனை, மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு?

விவசாயிகளுக்கு எதிராக புது சட்ட திருத்தங்கள் வருகிறது என கவலையும் பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. வெற்றி நிலத்தை விளைநிலமாக்கி, உணவும், உடையும் பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள் தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பலமுறை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்கு பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம். கடந்த நான்கு வருடங்களாக புதிய இணைப்புகளை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே நான்கு லட்சம் ரூபாய் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, கொள்முதல் விலை என ஏற்கனவே பல முனைகளில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்த சுமையையும் ஏற்றத் துடிக்கிறது இந்த அரசு.

லாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதை சரிசெய்ய வழிகளை கண்டறிய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள். விவசாயிகளை வஞ்சித்த தேசங்களில் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும்.

விளைவிப்பவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களை சிரமத்தில் ஆழ்த்தும் மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 ஐ திரும்பப் பெற வேண்டும். பெயரளவில் பாதிப்புகள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாக செயல்படுத்த வேண்டும்.

பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளை பகடைக்காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையை பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும்.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com