‘சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும்’: ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்
திட்டும் சுவரொட்டி ஒட்டும் செலவை, நற்பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்றும், தரம்தாழாதீர்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தான் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “தரந்தாழாதீர். வைது சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை, இவருக்கு பதிலளிக்க நானே போதும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அதிமுக அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை கமல் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அடங்கா தமிழன் கமல் குரூப்ஸ் என்ற பெயரில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டியில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா...வா..., எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை” என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் இந்த சுவரொட்டி குறித்து அறிந்த கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளார்.