சென்னையில் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிறது. இதனை கவுரவிக்கும் விதமாக அக்கட்சியின் சார்பில் முரசொலி பவள விழா கொண்டாடப்படவுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள முரசொலி பவளவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்நிலையில் முரசொலி பவளவிழா தொடர்பான அழைப்பிதழில் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்குவார்கள் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி பார்வையாளராக மட்டுமே பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுவதால் அழைப்பதழில் அவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிகிறது.