அடுத்தவாரம் மீண்டும் பிக்பாஸில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்? - வெளியான புதுத் தகவல்

அடுத்தவாரம் மீண்டும் பிக்பாஸில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்? - வெளியான புதுத் தகவல்

அடுத்தவாரம் மீண்டும் பிக்பாஸில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்? - வெளியான புதுத் தகவல்
Published on

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் கமல்ஹாசன் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது தொடர்பாக அவர் கடந்த 22ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியினை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவருக்குப் பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ப்ரோமோவில் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்ட கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தே பேசுகிறார்.

அந்த வீடியோவில், ''வணக்கம் மக்களை நோக்கி மருத்துவமனை டிவியில் இருந்து பேசுவது உங்களுடன் நான். தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டுகளிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்வதாக அறிவித்திருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்'' என கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம். ''கமல்ஹாசன் நலமுடன் இருக்கிறார். கொரோனாவிலிருந்து நலமுடன் மீண்டு வந்திருக்கிறார். சில டெஸ்ட்டுகள் மட்டும் உள்ளது. அந்த டெஸ்ட் ரிசல்டுகள் இந்த வாரம் வந்துவிடும். மற்றபடி நலமுடன் இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியைக்கூட அவர் நடத்த வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் வேண்டாம் என அறிவுறுத்தியதால் தவிர்த்துவிட்டார்.

இந்த வாரத்துடன் அவருக்கு 15 நாட்கள் நிறைவடைகின்றன. இந்த வார இறுதியில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது போல புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அது அவர் சில மாதங்களுக்கு முன்பாக காலில் அறுவை சிகிச்சை செய்த பின்னர் வீடு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்'' என்றார். பிக்பாஸில் அடுத்த வாரம் கமல்ஹாசனை பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு, 'நாங்களும் அதையேத்தான் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com