’அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்காதது, வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது’: கமல்
மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்காதது, வாய்ப்பில்லை என்பதை காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, தமிழகத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படாதது குறித்த கேள்விக்கு, இதன் மூலம் வாய்ப்பு இல்லை என்பதை தான் பார்க்க முடிகிறது எனவும், மறுக்கப்பட்டுள்ளது என்பதாகத் தெரியவில்லை எனவும் கூறினார்.
தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என முதல்வர் முதற்கொண்டு அனைவரும் நம்பிக்கையோடு இருந்த நிலையில் தற்போது ஏமாற்றமடைந்திருப்பது பற்றி கேட்டபோது, ’தமிழக மக்களின் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையும் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அடுத்த மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கருத்துக்கு, இதை தேர்தல் வாக்குறுதி போல் தான் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.