மாநிலங்களவைக்கு செல்கிறார் கமல்ஹாசன்!
கடந்த 2019 ஜூலை 5 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்களான வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க வைகோ, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.
இவர்களின் மாநிலங்களவை எம்பிக்கான பதவிக்காலம் வருகின்றன ஜூலை மாதத்தில் முடிவடையும்நிலையில், இதற்கான தேர்தல் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திமுக தனது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளர்களாக
1. திரு. பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,
2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம்
3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா
ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் மநீமவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. மேலும், நான்கு எம்பி சீட்டுகளில் மீதமுள்ள மூன்று சீட்டுகளுக்கு திமுகவை சேர்ந்த பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம , ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோரும் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.