
2021 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துதான் போட்டி என மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டனர்.
மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் உறுதி செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று 100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தொகுதி வாரியாக மக்கள் நீதிமய்யத்தின் வளர்ச்சி குறித்து கமல்ஹாசன் மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய கமல்ஹாசன் “மக்களுடன் தான் கூட்டணி. கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன்” என தெரிவித்தார்.