கமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்
தேர்தல் வித்தகர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், பாஜக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்தவர் ஆவார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் அமைத்து கொடுப்பவர் பிரசாந்த் கிஷோர். இவர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டவர்களுக்கு வியூகங்கள் அமைத்து கொடுத்து அவர்களை வெற்றி பெறச்செய்தவர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில், சட்டமன்ற தேர்தல், கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக சட்டப்பேரவை தேர்தலுக்கு வியூகங்களை அமைத்துக் கொடுப்பதற்காக பிரசாந்த் கிஷோரை அதிமுக அணுகியதாக கூறப்பட்டது. ஆனால் இரு தரப்பும் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் கமல்ஹாசனுடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.